தொடர்புடைய கட்டுரை


பூமியின் அச்சு

பி.ரெ. ஜீவன்

13th Apr 2019

A   A   A

பூமியின் தென் துருவத்திலிருந்து வட துருவம் வரை இருக்கும் நேர்கோடு தான் பூமியின் அச்சு. இந்த அச்சை மையமாக வைத்து பூமி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருமுறை சுழன்று வருகிறது. இதனால் இரவு பகல் என்ற இரு பொழுதுகள் ஒவ்வொரு நாளும் பூமிக்கு வருகிறது. ஒரு சுழற்சி பூமியில் ஒரு நாள் ஆகிறது.

பூமியின் அச்சு நேராக இல்லை. மாறாக 23.4° டிகிரி சரிந்து இருக்கிறது. இந்த சரிவு பூமியில் சூரியனின் தாக்கத்தில் ஒரு பெரும் விளைவை ஏற்படுத்துகிறது. பூமியில் ஏற்படும் காலங்களில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு சிறு பங்கு வகித்தாலும், பூமியின் அச்சின் சரிவு பெரும் பங்கு வகிக்கிறது.

தட்டையான இடத்தில் சூரிய ஒளி படுவதற்கும் சாய்ந்த இடத்தில் சூரிய ஒளி படுவதற்கும் வித்தியாசம் உண்டு. தட்டையான இடத்தில் அதிக வெப்பம் படும், சாய்ந்த இடத்தில் குறைவாக வெப்பம் படும். பூமி ஒரு உருண்டை பந்து. சில இடங்களில் சூரிய ஒளி நேராக படும், சில இடங்களில் சாய்ந்து படும்.

பூமத்திய ரேகையில் (equator) சூரிய ஒளி நேராக படும். எனவே அங்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக துருவங்களை நோக்கி சென்றால் சூரிய ஒளி சாய்ந்த இடங்களில் படும். எனவே அங்கு குளிராக இருக்கும். துருவங்கள் இடையே மிக குறைவாகவே தான் சூரிய ஒளி நேராக படும். எனவே அங்கு மிக குளிராக உள்ளது. ஆனால் துருவங்களில் வெப்பம் வருவதற்கு காரணம் பூமியின் அச்சு சாய்ந்து இருப்பது தான்.

துருவங்களில் 6 மாதம் சூரியன் உதயமாகாது, மற்றும் 6 மாதம் சூரியன் மறையாது. இவ்விடங்களில் 6 மாதம் பகல் மற்றும் 6 மாதம் இரவு. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் தேதி அருகில் வட துருவத்தில் சூரியன் உதயமாகும். அன்று வட துருவத்தில் சூரியன் மறையும். செப்டம்பர் 23 அன்று வட துருவத்தில் சூரியன் மறைந்து தென் துருவத்தில் சூரியன் உதயமாகும். பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால், இவ்விடங்களில் இப்படி 6 மாதங்கள் பகலும் 6 மாதங்கள் இரவுமாக இருக்கிறது.

மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 ஆம் தேதி அருகே இப்படி சூரிய உதயம் மற்றும் மறைவு துருவங்களில் நடக்கும் நாட்களை உத்தராயணம் (equinox) என்று கூறுவர். அன்று பகலும் இரவும் சமமாக 12 மணி நேரமாக இருக்கும். மற்ற நாட்களில் அதிக பகல் அல்லது அதிக இரவு இருக்கும். இதனால் தான் நமக்கு ஒவ்வொரு நாளும் நம் இடங்களில் வெவ்வேறு நேரத்தில் சூரிய உதயம் மற்றும் மறைவு நிகழ்கிறது.

செப்டம்பர் 23 அருகில் வரும் உத்தராயணத்தை இலையுதிர் கால உத்தராயணம் (autumn equinox) என்று கூறுவர். இது இலையுதிர் காலத்தில் நிகழும். மார்ச் 20 அருகில் வரும் உத்தராயணத்தை வசந்தகால உத்தராயணம் (spring equinox) என்று கூறுவர். இந்த உத்தராயணம் வசந்த காலத்தில் நிகழும். ஜூன் 21 அருகே வட துருவத்தில் சூரியன் உச்ச நிலையில் இருக்கும். இந்த நாளை கோடைகால சங்கிராந்தி (Summer Solstice) என்று கூறுவர். இது கோடை காலத்தில் நடைபெறும். டிசம்பர் 21 அருகே தென் துருவத்தில் சூரியன் உச்ச நிலையில் இருக்கும். குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என்று கூறுவர். இது குளிர் காலத்தில் நடைபெறும்.

இப்படி பூமியின் அச்சு கோடை, வசந்த, இலையுதிர் மற்றும் குளிர் என்று 4 காலங்கள் பூமத்திய ரேகையின் வட பக்கத்தில் (northern hemisphere) உருவாகிறது. ஆம் பூமத்திய ரேகையின் வட பக்கத்தில் மட்டும். மனித கலாச்சாரங்கள் பெரும்பாலும் பூமத்திய ரேகையின் வட பக்கத்தில் தான் துவங்கியது. எனவே அவர்கள் இந்த காலங்களை அவர்களுக்கு எப்போது நிகழ்கிறதோ, அதை வைத்து கணக்கிட்டனர். பூமத்திய ரேகையின் தென் பக்கத்தில் இப்படி மாறி நிகழும்.

எடுத்துக்காட்டுக்கு பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால் டிசம்பர் மாதத்தில் வட துருவம் சூரியனை பார்த்து இருக்காது. எனவே அங்கு குளிர் காலம். ஆனால் தென் துருவம் சூரியனை பார்த்து இருக்கும், எனவே அங்கு கோடை காலம். ஐரோப்பா, ரஷ்யா, சீனா, வட இந்தியா போன்ற இடங்களில் டிசம்பர் மாதம் குளிர் காலம். ஆனால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற இடங்களில் அப்போது கோடை காலம்.

ஜூன் மாதம் பூமியின் அச்சு திரும்பி இருக்கும். தென் துருவம் சூரியனை நோக்கி இருக்காது. வட துருவம் தான் சூரியனை நோக்கி இருக்கும். எனவே அப்போது பூமத்திய ரேகையின் வட பக்கத்தில் கோடை காலமாகவும், தென் பக்கத்தில் குளிர் காலமாகவும் இருக்கும். பெரும்பான்மையான துவக்ககால கலாச்சாரங்கள் பூமத்திய ரேகையின் வட பக்கத்தில் இருந்து துவங்கியதால், நமக்கு இன்றும் அதே வழக்கமாக இருக்கிறது.

பூமியின் அச்சு சரியாமல் இருந்தால், இந்த கால மாற்றங்கள் இப்போது பூமியில் நிகழ்வது போன்று நடைபெறாது. பூமியின் அச்சும் வட்டப்பாதையும் சேர்ந்து இப்படி பட்ட காலங்களை பூமியில் உருவாக்குகிறது.

செவ்வாய் கிரகத்துக்கு நிலையான அச்சு கிடையாது. எனவே அது சுற்றும்போது மிகவும் தள்ளாடும். ஒரு நேரத்தில் வட துருவத்தில் இருக்கும் இடங்கள் மற்றொரு சமயம் அதன் செவ்வாத்திய ரேகையில் (Equator of Mars) இருக்கலாம். இப்படி ஒரு சரியான சுழற்சி இல்லாமல் அங்கு இருக்கிறது. காலங்கள் மிகவும் மாறுபடும். ஒரே நாளில் கோடை, குளிர், வசந்தம் போன்ற எல்லா காலங்களும் ஒரே இடத்தில் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது அவ்விடத்தை உயிர் வாழ தகுதியற்ற இடமாக மாற்றியுள்ளது.

பூமிக்கு சரியான அச்சு இருப்பதால் செவ்வாய் கிரகம் போன்ற தள்ளாடுதல் இல்லை. எனவே நமக்கு எப்போது காலங்கள் மாறும் என்பதை கணிக்க முடியும். உயிரினங்கள் பூமியின் காலங்களை மிகவும் நம்ப முடிகிறது. இது உயிரினங்கள் எளிதில் வாழ உபயோகமாக இருக்கிறது.

பூமியின் அச்சு சரியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நம் நிலா. பூமியை அதன் பிடியினுள்ளிருந்து நழுவ விடுவதில்லை. எனவே பூமி ஒரு சரியான அச்சில் சுழன்று வருகிறது. நிலா பூமியிலிருந்து நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது, எதிர்காலத்தில் ஒரு நாள் நிலா பூமியை விட்டு விண்வெளியில் பறந்து சென்று விடும். அன்று செவ்வாய் கிரகத்தின் நிலைமை தான் பூமிக்கும். செவ்வாயில் பூமிக்கு இருப்பது போன்ற ஒரு நிலா இல்லாததால் அது சரியான அச்சு இல்லாமல் தள்ளாடுகிறது.

பூமி இப்படி ஒரு அச்சில் சுழல்வதை முதலில் கண்டுபிடித்தவர் ஆரியபட்டா. அவரின் கண்டுபிடிப்பு பகல் இரவு மட்டும் அல்ல, காலங்களையும் விளக்குகிறது.

கிரகோரியன் நாட்காட்டி, ஜூலியன் நாட்காட்டி மட்டும் அல்ல, தமிழ் நாட்காட்டி உட்பட உலகின் எல்லா நாட்காட்டியும் பூமியின் அச்சை பயன்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பூமியின் அச்சை கணக்கிடுவது மிக முக்கியமான ஓன்று. சரியான நேரத்தில் பறக்காத பறவைகள், அதன் கூட்டத்துக்கு மோசமான தருணங்களை கொண்டு வரும். இது உலகின் எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும்.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.